அழிவைத் தேடிப் போகாத
ஆசைக்கு நீயும் அணைபோடு
இளமையில் எய்ட்ஸ் வந்திட்டால்
ஈசல் போல வாழ்வாகும்
உலகில் எங்கும் மருந்தில்லை
ஊழ்வினைக்கும் தொடர்பில்லை
எய்ட்ஸை என்றும் தடுத்திட
ஏற்ற துணையுடன் வாழ்ந்திடு
ஐயம் நீங்க தெரிந்து கொள்
ஒருவனுக்கு ஒருத்தி தான்
ஓடும் எய்ட்ஸூம் விலகி தான்
ஔடதம் ஒழுக்கம் ஒன்றுதான்
அஃதே வாழ்வுக்கு நன்று தான்
அனுமன் துதித்த அவதாரன் வாழ்வை
மனமே மதித்துநீபின் பற்று! - மனைவியை
நேசித்தால் ஆட்கொல்லி நோய்வாரா; போகாதோர்
ஊசி முனையில் உயிர்!
இல்லாள் இருக்கையில் இன்பத்தை தேடியோடி
அல்லல் படுகின்ற ஆடவர்காள்! - கள்ளவிழி
வேசியால் 'எய்ட்ஸ்'வந்து வீழாமல் பாதுகாப்பீர்
ஊசி முனையில் உயிர்.
உலகையே உலுக்கிய வார்த்தை
உள்ளங்களை உறுத்திய நோய் !
முறையிலா உறவால் வந்திடும்
குறையுள்ள குருதியால் பரவிடும் !
தடமாறிய பாதையால் வந்திடும்
தடுமாறிய மனத்தால் ஒட்டிடும் !
உண்மை உருவத்தை மாற்றிடும்
உன்னத வாழ்வையே உருக்கிடும் !
வாழையடி வாழையாய் வந்திடும்
வாரிசின் வாழ்வை குலைத்திடும் !
எய்ட்ஸ் வந்தோரை ஒதுக்காதீர்
ஏளனமாய் ஏறிட்டு பார்க்காதீர் !
வழிமுறையும் உண்டு நலமுற
விதியென்று மனம் கலங்காதீர் !
மனத்தை அலைபாய விடாதீர்
மனைவி மக்களை மறவாதீர் !
விளக்கி சொல்லிடுங்கள் இதனை
விவரம் அறிந்தோர் உலகுக்கு !